புதுக்கோட்டை, அக்.18 - கபடி அணியில் விளையாட அனுமதிக்கா மல், சப் சூட்டாக பயன்படுத்திய விரக்தியில் மற்றொரு வீரரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுக்கோட்டையை அடுத்த பெருங்க ளூர் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த வர்கள் அருண்(21), பார்த்திபன் (21), மணி மாறன் (24). இவர்கள் சக நண்பர்களுடன் சேர்ந்து ‘தளபதி பாய்ஸ்’ எனும் பெயரில் கபடி அணியில் விளையாடி வந்தனர். இந்நிலையில், கடந்த 2018-ல் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு கபடி விளையாடச் சென்றபோது, பார்த்திபன் மற்றும் மணிமாறன் ஆகியோரை விளையாடு வதற்கு அனுமதிக்காமல் சப்சூட்டாக அருண் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர் பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர் பான விரோதத்தில், 2018 செப்.17 ஆம் தேதி இரவு வீட்டின் அருகே நடந்து சென்ற அருணை, பார்த்திபன் மற்றும் மணிமாறன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து ஆதனக் கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், நீதிபதி பாபுலால் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். அதில், பார்த்திபன் மற்றும் மணிமாறன் ஆகியோருக்கு கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், சதி திட்டம் தீட்டிய குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜரானார்.