கோட்டயம், ஆக.27- கேரளத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கெவின் ஆணவக்கொலையில் குற்றவாளிகள் என ஏற்கனவே நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட பத்து பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கெவின் பி.ஜேசாபின் (24). இவரும் கொல்லம் மாவட்டம் தென்மலாவைச் சேர்ந்த நீனுவும் காதலித்து வந்தனர். பட்டியலினத்தைச் சேர்ந்த கெவினை திருமணம் செய்ய நீனுவின் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பை மீறி 2018 மே 24ஆம் தேதி கெவினும் நீனுவும் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாகவே தங்களது முடிவை உறவினர்களுக்கு தெரிவித்திருந்தனர். இரண்டு நாட்கள் கழித்து (மே 26) காவல் நிலையத்தில் இது குறித்து விசாரணை நடந்தது. உறவினர் அனீஷின் வீட்டில் கெவின் தங்கியிருந்தார். மே 27அன்று கெவினையும் அனீஷையும் காணவில்லை என தகவல் வந்தது. பின்னர் அனீஷ் கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டார். 28ஆம் தேதி புனலூர் அருகில் உள்ள தென்மலை சாலியக்கரை ஆற்றிலிருந்து கெவினின் சடலம் மீட்கப்பட்டது.
ஐஜி விஜய் சாகர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கெவினின் மனைவியான நீனுவின் தந்தை, சகோதரர்கள் உட்பட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு கோட்டயம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது. வெள்ளியன்று (ஆக.23) இந்த வழக்கில் நீனுவின் சகோதரன் ஷானு சாக்கோ, நியாஸ் மோன் என்கிற சின்னு, இஷான் இஸ்மாயில், ரியாஸ் இப்ராகிம் குட்டி, மனு முரளீதரன், ஷிபின் ஸஜாத், என்.நிஷாத், பசில் செரீப், ஷானு சாஜகான்,டிட்டு ஜெரோம் ஆகிய பத்துபேரை குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அதை தொடர்ந்து அவர்களுக்கான தண்டனை குறித்த தீர்ப்பை செவ்வாயன்று (ஆக.27) நீதிபதி அறிவித்தார். அதன்படி குற்றவாளிகள் பத்து பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையான ரூ.4,85,000 த்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலாவது சாட்சி அனீசுக்கும் மீதமுள்ள தொகை கெவினின் தந்தை ஜோசப், கெவினின் மனைவி நீனு ஆகியோருக்கு சம அளவில் வழங்கப்படும்.
கெவின் ஆணவக்கொலை செய்யப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்தது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் குற்றவாளிகளின் வயது மற்றும் குற்றப்பின்னணி அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. நீனு தனது பெற்றோருடன் செல்ல மறுத்ததும் குடும்பத்தினருக்கு எதிராக உறுதியான சாட்சிமளித்ததும் கேரளத்தின் முதலாவது ஆணவக்கொலையான கெவின் வழக்கில் நீதி கிடைக்க உதவியது. 113 சாட்சிகள் உட்பட விசாரணை 90 நாட்களில் நிறைவு பெற்றது. சம்பவம் நடந்து 14 மாதங்களில் தீர்ப்பு வழங்கியது சாதனையாக கூறப்படுகிறது. நீனுவின் தந்தை சாக்கோ விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கெவினின் தந்தை ஜோசப் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.