districts

img

மனித விலங்கு மோதலை தடுக்க மின்வேலி அமைத்து நடவடிக்கை எடுக்க சிஐடியு கோரிக்கை  

பொள்ளாச்சி அருகே தேயிலைத்தோட்டத்தில் மின்வேலி அமைத்து நடவடிக்கை எடுக்க, தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.  

வனத்துறை சார்பில் மின்வேலி அமைத்து தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின்(சிஐடியு) பொதுச்செயலாளர் பி,பரமசிவம் வனத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், பொள்ளாச்சி அடுத்த வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கு அடிக்கடி சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் புகுவதால் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இதனால் மக்கள் எந்நேரமும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  

எனவே தேயிலை தோட்டக் குடியிருப்புகளில் காடுகளை ஒட்டி வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், குறைந்த அளவு மின் திறன்கொண்ட மின் வேலி அமைக்க வேண்டும். இதனால் பல ஆயிரம் மனித உயிர்கள் பாதுகாக்கப்படும்.

இதுகுறித்து தமிழக அரசும், வனத்துறையும், உடனடியாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் தலையீடு செய்து தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும். தமிழக வனத்துறை அமைச்சர் இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.