பெரம்பலூர், பிப்.26 - பூலாம்பாடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாயாரிகளுக்கு முன்னுரிமை தருவதாக கூறி விவசாயிகள் நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் அரசின் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அரும்பாவூர், பூலாம்பாடி, கடம்பூர், கள்ளபட்டி, பெரியம்மாபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை பூலாம்பாடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு தற்போது அதிக அளவிலான நெல் மூட்டைகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. அதிகபட்சமாக ஒருவாரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 25.2.2022 அன்று இரவு பூலாம்பாடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளை காக்க வைத்து விட்டு சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் லாரியில் நெல் மூட்டைகளை கொண்டு வந்துள்ளார். அவரின் நெல் மூட்டைகளை உடனடியாக இறக்கி கொள்முதல் செய்யப்படுவதை அறிந்த விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகளை காக்க வைத்து விட்டு வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் துணையோடு இச்செயல் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், தங்களை மட்டும் ஏன் காக்க வைக்கின்றனர் என கேள்வியும் எழுப்பினர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகள் நெல்லுக்கு முன்னுரிமை தந்து கொள்முதல் செய்வதாக கூறப்பட்டதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.