districts

img

குன்னூரில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்: மலை ரயில் ரத்து

நீலகிரி, டிச.3- நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெஞ்சால் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி-குன்னூர் மற்றும் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே புதன்கிழமை வரையும், ஊட்டி-குன்னூர் இடையே செவ்வாய்க்கிழமை வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மலை ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில் தண்டவாள பராமரிப்புப் பணியை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் ரயில் நிலையம் முன்பு உள்ள தண்டவாளத்தில் பழைய மரக்கட்டைகளை அகற்றி புதிய கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.