பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தையடுத்து, 10 சதவிகித கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30,000 மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், விசைத்தறி தொழில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்..
இந்நிலையில், கடந்த 26 மாதங்களுக்கு மேலாக, புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படாததால், விசைத்தறி தொழிற்சங்கத்தினர் 75 சதவிகிதம் கூலி உயர்வு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, பள்ளிபாளையம் கன்னிமார் திருமண மண்டபத்தில் விசைத்தறி தொழிற்சங்கம் மற்றும் விசைத்தறி நிர்வாகங்கள் சார்பில், கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆறு கட்டங்களை தாண்டி பேச்சுவார்த்தையில் , எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், திங்கட்கிழமை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதென சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமார் தலைமையில், விசைத்தறி நிர்வாகம் மற்றும் விசைத்தறி தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐசிடியு, ஏஐசிசிடியு உள்ளிட்ட மூன்று சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொழிற்சங்க நிர்வாகிகள் தற்போதைய பொருளாதார நிலைக்கு ஏற்ப விசைத்தறி தொழிலாளர்களின் வருவாய் இல்லாததால், தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாகவும் எனவே கூலி உயர்வு என்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று எனவும் வலியுறுத்தி பேசினர்.
சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நீடித்த பேச்சு வார்த்தையின் நிறைவில், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பிரிவு ஆண், பெண் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் 10% கூலி உயர்வு வழங்குவதென முடிவானது.
இதன் அடிப்படையில், 1.6.2023 முதல் 31.5.2024 வரை ஏழு சதவிகிதம் கூலி உயர்வு, 1.6.2024 முதல் 1.6.2025 வரை மூன்று சதவிகிதம் சேர்த்து 10% கூலி உயர்வு தருவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தமானது இரண்டு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்குமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து விசைத்தறி தொழிற்சங்கம் மற்றும் விசைத்தறி நிர்வாகங்கள் சார்பில் கூலி உயர்வு ஒப்பந்தம் அமுலாகி படிவத்தில் கையெழுத்திடப்பட்டது .
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசைத்தறி தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமாக கூலி உயர்வு ஏற்பட்டுள்ளதால் விசைத்தறி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய கூலி ஒப்பந்தத்தின் காரணமாக மாதத்திற்கு ஒரு விசைத்தறி தொழிலாளி சராசரியாக 1200 முதல் ரூபாய் 1500 வரை கூடுதல் வருவாய் பெறுவார்கள் என சிஐடியு தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில், அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வழக்கம் போல வேலைக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.