districts

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம், ஜன.28- சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கிடவும், இவர்களை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க கோரியும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்தும், 1.7.2022 முதல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட எல்லா ஓய்வூதியர் அமைப்புகளையும் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க நாகை மாவட்டத் தலைவர் ஆ.நடராசன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. நாகை வட்ட பொருளாளர் பாபுராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைககளை விளக்கி உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ப.அந்துவஞ்சேரல், ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வி.பாலசுப்பிரமணியன், அரசு விரைவு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் எஸ்.கணபதி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.மதிவாணன்,  பாரத் சஞ்சார் நிகாம் லிட் ஓய்வூதியர் சங்க எம்.குருசாமி, நாகை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.   தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் வி.கோவிந்தராஜ்  நிறைவுரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் எம்.பி.குணசேகரன் நன்றி கூறினார்.