districts

img

பாலியல் தொந்தரவு வழக்கு: தலைமை ஆசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி

பள்ளியில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை முனிச்சாலையில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பள்ளியில் பணியாற்றிய 2 ஆசிரியைகளை தற்காலிகமாக இடமாற்றம் செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்  தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்வதாக, ஆசிரியைகள் புகார் அளித்ததன் அதனடிப்படையிலேயே அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 2 பெண் ஆசிரியைகளும் அனுப்பிய புகார் கடிதத்தின் அடிப்படையில் கீரைத்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அதன்பேரில் மகளிர் காவல்துறையினர்  ஜோசப் ஜெயசீலன் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை. முதல் கட்ட விசாரணை நடத்தாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.