கிருஷ்ணகிரியில் மண் சரிந்ததில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு புறம்போக்கு நிலம் ஒன்று உள்ளது. அங்கு சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மண் எடுத்துள்ளனர். அதில் வெள்ளை நிற கற்கள் இருப்பதை கண்ட சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த ராதா, லட்சுமி, உமி, விமலம்மா ஆகிய நான்கு பேரும் கற்களை பொடி செய்து கோலமாவாக பயன்படுத்த நினைத்துள்ளனர். அதனால் இன்று அந்த பகுதிக்கு 4 பேரும் சென்று மேலும் குழி தோண்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்ததில் 4 பேரும் மண்ணில் சிக்கி கொண்டனர். இதில் ராதா(28) மற்றும் லட்சுமி(26) ஆகிய இருவரும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
இதை கண்ட ஊர்மக்கள் உமி, விமலம்மா ஆகிய 2 பேரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனை தொடர்ந்து இந்த சம்பவம் அறிந்த தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.