கரூர், மார்ச் 30- பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள வேலாயுதம்பாளையம் புற வழிச்சாலை யில் இயங்கி வரும் அரசு மதுபான கடை யை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கரூர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் புற வழிச்சாலையில் இயங்கி வரும் அரசு மதுபான கடையின் அருகில் புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எதிர்ப்புறம் தனியார் பள்ளி, கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு அலுவல கங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முக்கியமாக கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பணிகளுக்கு செல்லும் பெண்கள் இந்த மதுபான கடையை கடந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பெண்களை போதை ஆசாமிகளால் தொந்தரவு ஏற்படுகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் மது அருந்திவிட்டு சாலை ஓரங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் போதை ஆசாமிகள் அலங்கோலமாக படுத்து கிடக்கின்றனர். இப்பகுதிகளில் அதிக திருட்டு சம்பவங்களும் நடந்து வருகின்றன. சில நேரங்களில் மது அருந்திவிட்டு செல்லும் போதை ஆசாமிகள் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டு உயிர் இழக்கும் நிலைமை ஏற்படுகிறது. எனவே, குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும். மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கடையை அகற்றும் வரை போராட்டம் நடத்தப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.