கரூர், மார்ச் 7 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கரூர் மாவட்ட குழு கூட்டம் சங்கத்தின் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணகி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பி.ஜீவா மாநில முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்டச் செயலாளர் கே.வி.கணேசன் எதிர்காலப் பணிகள் குறித்துப் பேசினார். கிருஷ்ணராயபுரம், கடவூர் ஒன்றியங்களில் நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்குவதில் பாரபட்சமாக செயல்படுகின்றனர். இதனை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிப்பதுடன், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நூறு நாள் வேலை திட்டத்தில் உடனடியாக பணிகளை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகள் மீது ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிருஷ்ணராயபுரம் கடவூர் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை திரட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீராச்சாமி, சாந்தி, முனியப்பன், பழனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.