கள்ளக்குறிச்சி, நவ. 8- சின்னசேலம் அருகே நயினார்பாளை யம் கிராம பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரை சந்தித்து பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நைனார்பாளையம் கிராமம் இந்திரா நகர் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த 130 குடும்பங்கள் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு பட்டா வழங்க வில்லை. இதனால், மின் இணைப்பு கிடைக்கவில்லை. சாலை வசதியும் செய்து தரவில்லை. தற்போது, 10 ஆண்டுகளுக்கும் மேல் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கு பட்டா வழங்கு வதை தடுக்கும் வகையில் இதே பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களின் சுய நலத்திற்காகவும், உள்நோக்கத்துடனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசியும் வழக்கை திரும்பப் பெற வேண்டுமானால் ரூ.25,000 பணம் மற்றும் 2 சென்ட் நிலத்தையும் லஞ்சமாக கேட்கிறார்கள். எனவே, தாங்கள் விசாரணை நடத்தி பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.