சிதம்பரம், டிச. 1- பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு, மாநில அரசு நிதி பங்கீட்டின் கீழ் அரசு பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நலன் கருதி உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். பாடத்திட்டத்தோடு, கல்வி இணை செயல்பாடும் தேவை என்ற அடிப்படை யில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரம் காலிப்பணி யிடங்கள் ஏற்பட்டு, தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 2012ஆம் ஆண்டு ரூ 5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர் 2014ஆம் ஆண்டு ரூ 2 ஆயிரம் ஊதிய உயர்வு, அடுத்து 2017ஆம் ஆண்டு 700, கடைசியாக 2021ஆம் ஆண்டு ரூ 2,300 என உயர்த்தி ரூ 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரு கிறார்கள். இந்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் அலுவலக ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள். இப்போது அலுவலகத்தில் பணிபுரிகிற ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே திட்டத்தில் வேலை செய்து வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் இந்த ஊதிய உயர்வை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் உடன டியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டப் பட்டுள்ளது.