கடலூர், மே 20- கல்லூரி மாணவி மரணத்தில் மர்மம் நீடிப்பதால் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் மகள் தனலட்சுமி (19). இவர் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள கேஎன்சி மகளிர் கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், செவ்வாயன்று(மே17) கல்லூரி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்வில் தோல்வியடைந்து விடுவேன் என்ற பயத்தில் தற்கொலை முடிவு எடுத்திருப்பதாக கடிதமும் எழுதி வைத்திருந்தார். ஆனால், தனலெட்சுமி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரது சாவில் சந்தேகம் உள்ளதால் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரி பெற்றோரும் உறவினர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, காவல்துறை உயர்அதிகாரிகள் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச்செயலாளர் கோ. மாதவன் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.