districts

img

2 ஆவது நாளாக மழைநீரில் மிதக்கிறது கடலூர்

கடலூர்,டிச.3- பெஞ்சால் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில்  கனமழை பெய்து, பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.  நூற்றுக்கணக்கான  வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.  இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததின் கார ணமாக சாத்தனூர் அணை நிரம்பியதை அடுத்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

அது, 2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. கடலூர் மாவட்டம் வழியாக ஓடும் தென்பெண்ணை ஆறு பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் வழியாகச் சென்று தாழங்குடா கிராமத்தின் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக அளவுக்கு அதிகமான வெள்ள நீரால் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதி, கிராமங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தியது.

தென்பெண்ணை ஆற்றின் இரு கரைகளும் தெரியாத அளவிற்கு வெள்ள  நீர் பாய்ந்து ஓடி வங்கக் கடலில் கலந்தது. தென்பெண்ணையாற்றில் திறந்து விடக் கூடிய நீரின் அளவு திங்கள்கிழமை இரவு குறைக்கப்பட்டதன் காரணமாக குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர் படிப்படியாக வடிய தொடங்கியது. ஆனால் முழுமையாக வடியாததால் குடியிருப்புகளுக்குள் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இரண்டாவது நாளாக கடலூர் மாநகரம் தண்ணீரில் மிதந்து வருகிறது.

கடலூர் மாநகரில் குண்டு சாலை, செம்மண்டலம், வெளி செம்மண்டலம், சாவடி, ஆல் பேட்டை, குமரப்பன் நகர், நடேசன் நகர், குறிஞ்சி நகர், கடலூர் ஒன்றிய பகுதியில் குண்டு உப்பல வாடி, கங்கனாங்குப்பம், பெரிய கங்கனாங்குப்பம், உச்சிமேடு, இரண்டா யிரம் வளாகம், சின்ன பகண்டை, பெரிய பகண்டை உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நகர்கள், கிராமங்களில் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் புகுந்து வீடுகளை மூழ்கடித்துள்ளது. பெஞ்சால் புயலுக்காக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 30 மாலை மின்சாரம் நிறுத்தப் பட்டது. நான்காவது நாளாக பல்வேறு பகுதிகளில் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.