districts

img

ஒன்றிய அரசின் வருமான வரிச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோட்டில் கடையடைப்பு, வேலை நிறுத்தம்

ஒன்றிய அரசின் வருமான வரி சட்ட  43B(H) திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விசைத்தறி உரிமையாளர்களும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, ஈரோட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் வீதி, டி.வி.எஸ். வீதி, பிருந்தா வீதி, கோட்டை, என்.எம்.எஸ்.காம்பவுண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஜவுளி மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இந்த கடையடைப்பு போராட்டத்தில் ஈரோட்டில் மட்டும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி மற்றும் அதனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தி நிலையங்கள், கடைகள் மற்றும் குடோன்கள் அடைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஈரோடு கிளாத் மெர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் சிதம்பர சரவணன், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் கூறியதாவது, சிறு, குறுந்தொழில் செய்வோரது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக, ஒன்றிய அரசு வருமான வரிச்சட்டத்தில் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் மார்ச் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய சட்டத்தின்படி, தங்கள் இருப்பு நிலை குறிப்பு (பேலன்ஸ் ஷீட்) கணக்கில் இருக்கும் வணிகக் கடன் நிலுவைகள், 45 நாள்களுக்கு மேலாகி இருந்தால். அவை வருமானமாக கருதப்பட்டு, அவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என ஒன்றிய அரசு புதிய சட்ட மாறுதலை செய்துள்ளது.

ஜவுளி சார்ந்த தொழிலில் துணிகளை கொள்முதல் செய்து பிராசசிங், டையிங், பிரிண்டிங், ஸ்டிச்சிங் என பல நிலைகளைக் கடந்தே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கேற்ப, 45 நாள்களுக்குள் அல்லது அதற்கு மேலான நாள்களில் தான் கடன் தொகையை நேர் செய்வார்கள்.  நடைமுறை இப்படி இருக்கும்போது, தற்போதைய புதிய சட்ட திருத்தத்தால், அத்தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஜவுளி மற்றும் ஜவுளித் தொழில் சார்ந்த தொழில்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழில் நடத்தவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஜவுளித் தொழிலை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் இந்த சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி மற்றும் அது சார்ந்த தொழில் நிறுவனத்தினர் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். இதன் மூலமாக ஈரோட்டில் மட்டும் இன்று ரூ. 100 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினர்.

இதேபோல, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினரும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்ட் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர் பா.கந்தவேல் கூறுகையில்,

”ஒன்றிய அரசின் புதிய MSME 43B (H) எனும் வருமான வரி சட்டத் திருத்ததை கைவிடக் கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, எங்களது கூட்டமைப்பின் சார்பில், தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல், சேலம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் விசைத்தறிகளும் ஈரோடு மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் இயக்கப்படவில்லை.

இதன் மூலமாக இன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு அளவில் ரூ 35 கோடியும், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ரூ.7 கோடியும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.