புதுதில்லி, மே 24- அடுத்த 10 நாட்களில் 2600 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று ரயில்வே போர்டு தலைவர் வி.கே. யாதவ் கூறினார். இது தொடர்பாக சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியன் ரயில்வே அடுத்த பத்து நாட்களில் 2,600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் விடப்படும். இதனால் மேலும் சுமார் 36 லட்சம் புலம்பெயர்ந்தோர் பயனடைவார்கள். மே 1இலிருந்து 2600 ரயில்கள் விடப்பட்டிருக்கின்றன. இவை 35 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றிருக்கிறது. இதற்கான தேவை நீடிக்கும் வரையிலும் இதுபோன்ற ரயில்கள் தொடர்ந்து விடப்படும். இவற்றில் 1,246 ரயில்கள் (48.5 சதவீதம்) உத்தரப்பிரதேசத்திற்கும், 804 ரயில்கள் (31.3 சதவீதம்) பீகாருக்கும் விடப்பட்டிருக்கின்றன.
போக்குவரத்தில் நெரிசல் இருந்ததால் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் விடப்பட்டிருக்கின்றன. ரயில்வேக்கு கடந்த இரு மாதங்களில் பயணிகளிடமிருந்து வருவாய் என்பது பூஜ்யம்தான்- எனினும் பொருள் போக்குவரத்தில், சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது, 70 சதவீதம் வருவாய் கிடைத்திருக்கிறது. ஜூன் 1இலிருந்து 200 ரயில்கள் விடுவதற்கு அறிவிக்கப்பட்டதில் இதுவரை 17 லட்சம் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளைப் பதிவு செய்திருக்கின்றனர். ரயில்வே வழக்கமாக வசூலித்திடும் கட்டணம்தான் இந்த சிறப்பு ரயில்களுக்கும் வசூலிக்கிறது. கட்டணத்தில் உயர்வு எதுவும் இல்லை. மேற்குவங்கத்தில் ஆம்பன் புயல் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இயல்பு நிலை திரும்பியபின் போக்குவரத்து மீண்டும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு வி.கே.யாதவ் கூறினார். (ந.நி.)