சீர்காழி, ஏப்.28-திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கொள்முதல் செய்ய ப்பட்டுள்ள நெல் மூட்டைகளை நவீன குடோன்களில் சேமிக்க விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதியில் 54 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அந்தந்த நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலைய ஊழியர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் பல நாட்களாக நெல் மூட்டைகளை இரவும் பகலும் பாதுகாத்து வந்தனர்.இந்நிலையில் சேந்தங்குடி மற்றும் மணல்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள திறந்த வெளி இடங்களில் அதிக எண்ணிக்கையில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அனை த்து மூட்டைகளையும் பாதுகாப்பாக எடுத்துச் சென்று எருக்கூர் நவீன நெல் சேமிப்புக் கிடங்கில் பாதுகாக்க விவசாயிகள் சார்பில் பல முறை கோரிக்கை விடப்பட்டது. ஆனால் எருக்கூர் நவீனக் கிடங்கு திறந்து ஒரு வருடம் ஆகியும் சில இயந்திர கோளாறு காரணமாக இந்த குடோன் செயல்படாமல் பூட்டியேகிடக்கிறது. ஆனால் எடமணல் கிராமத்தில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் புதிதாக 40 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன நெல் கொள்முதல்நிலையம் கட்டி இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. குடோ னைச் சுற்றியுள்ள சுவர்களில் மூடிப் பாதுகாக்கும் வகையில் 20 க்கும் மேற் பட்ட ஷட்டர் கதவுகள் இன்னும் அமைக்கப்படாத நிலையில் பல இடங்களிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கும் பணி துவங்கியது.வானிலை அறிவிப்பை தொடர்ந்து மழை பொழியும் சூழல் ஏற்பட்டுள்ள தால் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1 மாதங்களுக்கு முன்பே கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை பாதுகாத்திருந்தால் அவசர அவசரமாக பணியில் ஈடுபடுவதை தவிர்த்திருக்கலாம். புயல் அபாயத்தால் மூன்று அல்லது நான்கு தினங்களில் அனைத்து நெல் மூட்டைகளும் குடோனுக்கு எடுத்துச் செல்லப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களையும் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் மூட்டைகளை எடுத்துச் செல்ல லாரிகளையும் பயன்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.