அகமதாபாத், ஏப்.23-படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்காக கடந்த 2015-இல் குஜராத்தில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தி அரசியலில் கால் பதித்தவர் ஹர்திக் படேல். அண்மையில் காங்கிரஸ் இணைந்த அவர், செவ்வாயன்று குஜராத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, பிரதமர் மோடி தன்னை ‘காவலாளி’ என்று கூறுவதைக் கடுமையாக கிண்டலடித்த ஹர்திக் படேல், ‘நாட்டிற்குத் தேவை பிரதமரே தவிர, காவலாளி அல்ல’ என்று கூறியுள்ளார்.“எனக்கு காவலாளி வேண்டுமென்றால் நான் நேபாளத்திலிருந்து அழைத்து வருவேன்; ஆனால், எனக்குத் தேவை ஒரு பிரதமர்; என் நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்கும் பிரதமர்; என் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் பிரதமர்: என் இளைஞர்களுக்கு கல்வி தரும் பிரதமர்; என் நாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவு செய்யும் பிரதமர்” என்று ஹர்திக் படேல் அடுக்கியுள்ளார்.