கல்லாறு சோதனை சாவடியில் இ-பாஸ் சோதனை நடைபெற்றதால், நீலகிரிக்குள் நுழைய கார்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக இ-பாஸ் நடைமுறையை நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகங்கள் சரியான முறையில் பின்பற்றவில்லை என தெரிகிறது.
இதனால், மலைப்பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து, இ-பாஸ் நடைமுறையை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதனால், நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு சோதனை சாவடியில் நிறுத்தி இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற தீவிர சோதனை செய்த பிறகே அதிகாரிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சோதனை சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.