districts

img

யு.ஜி.சி வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

யுஜிசி வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் கோவை தமிழ்நாடு அரசுக் கலைக் கல்லூரி ஆசிரியர் கழக கிளைச் செயலாளர் ஜெயக்குமார் பேசுகையில்,

யு.ஜி.சி வரைவறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அது தமிழக அரசு, மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு எதிராக உள்ளது. இது ஒரு ஏகாதிபத்திய அறிக்கையாக வெளிவந்து உள்ளது. எல்லா வித பொறுப்புகளும் யு.ஜி.சி க்கு மாற்றப்பட்டு உள்ளது. அப்படியானால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும், யு.ஜி.சி சொல்வதைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். அதனால் ஏகப்பட்ட பாதிப்புகள் நம் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு ஏற்படும். உதாரணமாக, ஒரு பணி மேம்பாடு பெறுவதற்கு, முனைவர் பட்டம் நிச்சயமாக வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறார்கள். ஒரு இளங்கலை பட்டம் வேண்டும் என்றால் நான்காண்டு படிக்க வேண்டும் என்கிறார்கள். பி.ஜி படிக்காமலேயே ஒரு கல்லூரியில் அல்லது பல்கலைக் கழகத்தில்  ஆசிரியரை நியமிக்கலாம் என கூறி உள்ளனர். இது சட்டவிரோதமானது. தகுதி இல்லாமல் எப்படி பணி செய்ய முடியும். ஏழை, எளிய மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் வகையில், கல்லூரியில் சேர வேண்டும் என்றாலே நுழைவு தேர்வு வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இளங்கலை, முதுகலை எதுவானாலும் நுழைவு தேர்வு கட்டாயம் என்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வு மாணவர்களை முழுமையாக கல்லூரி பக்கம் வர விடாமல் செய்து விடும். கல்லூரியில் ஆய்வகம் வேண்டும் என்று கூறினால், தனியார் நிறுவனங்களிடம் பிச்சை எடுங்கள் என்று கூறுகிறார்கள். யு.ஜி.சியின் அறிக்கையில் தனியார் நிறுவனங்களிடம் பணம் பெற்று ஆய்வகங்கள் அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். தற்போது இருக்கும் கட்டமைப்பு முழுமையாக இதனால் மாறுகிறது. வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக பணி அமர்த்த வேண்டும் என்கிறார்கள். அப்படி வழி மாநிலத்தவர்கள் துணைவேந்தர் ஆனால், தமிழ் கலாச்சாரம் என்பது பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?.. தமிழக அரசையும் மிரட்டுகிறார்கள்.. நாங்கள் கூறுவதை பின் தொடரவில்லை என்றால் பட்டங்கள் செல்லாது என அறிவிக்கிறோம் என்கிறார்கள். கல்லூரிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் பணம் கொடுப்பது தமிழக அரசு, ஆனால் இவர்கள் நாங்கள் சொல்லும் விதிகளை கடைபிடிங்கள் என்கிறார்கள். யு.ஜி.சி வரைவறிக்கை 2025யை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இதை திரும்ப பெறாத பட்சத்தில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இன்று நடைபெறும் இந்த போராட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் முன்பும் நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக போராட்டம் வலுவடையும் என கூறினார்,