சென்னை,ஆக.5- தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்த ஊரடங்கு வரும் 9 ஆம்தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று(ஆக.6)ஆலோசனை நடத்த உள்ளார். சமீபகாலமா குறைந்த வந்த கொரோனா தொற்று பரவல் தற்போது ஒரு சில மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதில் பெரும்பாலும் கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றன. இதனால், சென்னை மாநாகரட்சியில் பல இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் முதலமைச்சர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளரும் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிகிறார். தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.