சென்னை, ஏப். 20- வாரவிடுப்பு பறிப்பதை கண்டித்து செவ்வாயன்று (ஏப்.20) தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் விடுப்பு வழக்குவது தொடர்பாக 1998ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதற்கு மாறாக, நிர்வாகங்கள் புதிய விடுப்பு விதிகளை புகுத்தி, வார விடுப்பை பறிக்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிமனைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை பல்லவன் இல்லம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் தொமுச தலைவர் கி.நடராஜன் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களில் விடுப்பு தொடர்பாக புதிய விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களிடம் இருந்து சுமார் 5000 ஓய்வு நாட்கள் பறிக்கப்பட்டுள்ளது. இதனை கைவிட வேண்டும். சம்பள பட்டுவாடா சட்டத்திற்கு மாறாக மாதத்தின் கடைசி நாள் அல்லது முதல் நாள் ஊதியம் வழங்க வேண்டும்.
மாறாக, விருப்பப்படி வழங்குகின்றனர். அரசாணை, நிர்வாக ஆணைகள், தொழிலாளர் நலத்துறை அறிவுரைகளுக்கு மாறாக நிர்வாகங்கள் செயல்படுகின்றன. தற்போது இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பணி முடித்து செல்லும், காலையில் 4 மணிக்கு பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? இரவு நேரங்களில் பழுதுபார்ப்பு (மெயிண்டனன்ஸ்) இருக்கிறதா? ஞாயிற்றுக்கிழமைகளில் பழுதுபார்ப்பு பணி உள்ளதா? போன்றவை குறித்து நிர்வாகம் தெளிவாக அறிவிக்காமல் உள்ளது. பணி மறுக்கப்படும் தொழிலாளர்களுக்கும், முறையாக பணிக்கு வருவோருக்கும் வருகைபதிவேடு வழங்க வேண்டும். இவைகள் குறித்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாத இறுதியில் கூட்டமைப்பு அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் ஆர்.துரை, வி.தயானந்தம், ஏ.ஆர்.பாலாஜி (அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம்), சுப்பிரமணிய பிள்ளை (எச்எம்எஸ்), வெங்கடேசன் (எம்எல்எப்), நாகராஜ் (டிடிஎஸ்எப்), நாராயணசாமி (ஐஎன்டியுசி), அர்ஜூனன் (ஏஏஎல்எப்) உள்ளிட்டோர் பேசினர்.