ராயபுரம், ஜன.22- மேற்கு வங்க மாநிலம் கவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சனிக்கிழமை மாலை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. கொருக்குப்பேட்டை- சீனிவாசபுரம் இடையே சிக்னல் காரணமாக அவ்வழியே செல்லும் ரயில்கள் வழக்கமாக மெதுவாக செல்லும். இந்த நிலையில் கோர மண்டல் எக்ஸ்பிரஸ்ரயில் அப்பகுதியில் மெதுவாக சென்று கொண்டு இருந்த போது எஸ்-4 பெட்டியில் பயணிகள் சிலர் வாசல் கதவு அருகே நின்றபடி செல்போனை பார்த்தபடி இருந்தனர். அப்போது அதே பெட்டியின் வாசலில் அமர்ந்தபடி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ரோனி சேட் (வயது 24) என்பவர் தனது செல்போனை பார்த்த படி வந்தார். அப்போது தண்டவாளம் அருகே கீழே நின்று கொண்டு இருந்த கொள்ளையன் ஒருவன் திடீரென ரோனி சேட்டின் போனை தாவி பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோனன் சேட் செல்போனை பதறியபடி பிடிக்க முயன்றார். இதில் நிலையதடுமாறிய அவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் பெட்டியில் இருந்த பயணி கள் கூச்சலிட்டனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தண்டவாளம் அருகே பலத்த காயத்துடன் கிடந்த ரேனி சேட்டை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரோனன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்த கொள்ளையன் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
பலியான ரோனி சேட் மேற்குவங்க மாநிலம் சாந்த்ராகாச்சி பகுதியில் இருந்து வந்து உள்ளார். அவர் கொத்தனார் வேலை பார்க்க வந்த போது பலியாகி விட்டார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொருக்குப்பேட்டை- சீனிவாசபுரம் இடையே ரெயில்கள் சிக்னல் காரணமாக மெதுவாக செல்வதை சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள் ரெயில் பயணிகளிடம் செல்போன் மற்றும் நகை பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. காக்காமுட்டை பட பாணியில் ரயில் பெட்டி வாசலில் அமர்ந்து செல்போன் பயன்படுத்தும் பயணிகளை கம்பால் தாக்கி செல்போனை பறிப்பதும் நடந்து வருகிறது. இதேபோல் இதே இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் கம்பால் தாக்கி செல்போனை பறித்த போது ஓடும் ரயிலில் இருந்து மத்திய தொழில் பாது காப்பு படை வீரர் விவேக்குமார் தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. குற்றச்செயல்கள் அதிகம் நடந்து வரும் கொருக்குப்பேட்டை பகுதியில் ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.