districts

img

அனைவரும் சேர்ந்து நல்லதோர் எதிர்காலத்தை அமைப்போம்!

சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேச்சு

சென்னை மே 12- “அனைவரும் சேர்ந்து நல்லதோர் எதிர்காலத்தை அமைப்போம்” என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு 16வது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், “இதற்கு முன்னர் இருந்த அவைத்தலைவர் பலரும் அவைக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் பேரவைத் தலைவராக இருந்துள்ளனர். குறிப்பாக செல்லப்பாண்டி, சி.ப.ஆதித்தனார், பி.ஹெச். பாண்டியன், முனைவர் தமிழ்க்குடிமகன், முத்தையா, பழனிவேல் ராஜன், காளிமுத்து, இரா. ஆவுடையப்பன் பல பெருமைகளை பெற்றுள்ளனர்.  

இந்த பேரவையை சிறப்பாக நடத்தும் திறன் படைத்தவர் நீங்கள். தங்கள் தலைமையிலான இந்த அவையில் நாங்கள் செயல்படுவதை பொற்காலமாக கருதுகிறோம்.  பள்ளி ஆசிரியராகத் தொடங்கிய உங்கள் பணி  அவைத் தலைவர் பதவியை அடைந்துள்ளது. மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்த நீங்கள் இப்பொது 234 சட்டப்பேரவை உறுப்பினர்களை வழிநடத்தப்போகிறீர்கள்.  உங்களுடைய உத்தரவுகளுக்கு, கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். ஜனநாயகமும், மரபும் கண்டிப்பாக இருக்கும். எங்களுக்கு ஆணவம், கர்வம் இல்லை.  தோல்வியில் துவழுவதும், வெற்றியில் இறுமாப்பு கொள்வதும் எங்களுக்கு பழக்கமில்லை, மக்கள் கொடுத்த இந்த வெற்றி எங்களை மேலும் அடக்கமுள்ளவர்களாக ஆக்கியிருக்கிறது.  அவையின் மாண்பு கெடாமல், விரோத உணர்ச்சிக்கு இடம்தராமல், ஜனநாயக மரபுடன் நாங்கள் செயல்படுவோம் என்று உறுதி கூறுகிறேன். தங்களுக்கும் பேரவைத் துணைத் தலைவர் அவர்களுக்கும், எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய பாராட்டுதல்களை, வாழ்த்துகளை நன்றியோடு தெரிவித்துக்கொண்டு, வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து நமக்கும் நாட்டு மக்களுக்குமான நல்லதோர் எதிர்காலத்தை அமைக்க இந்த சட்டமன்ற ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாப்போம்” என்று கூறினார்.