சென்னை, டிச.1 28 வார குறைபிரசவத்தில் 750 கிராம் எடையுடன் இதயம் சுருங்கிய நிலையில் பிறந்த குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளித்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள டாக்டர் மேத்தா மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குறை பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. 1.040 கிலோ எடையுடனும் பிறந்த குழந்தை 4 வார சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. 750 கிராம் எடையுடன் பிறந்த மற்றொரு குழந்தையின் இதயத்தில் சுருக்கம் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அந்த குழந்தையின் இதயத்தை சுற்றி உள்ள சவ்வு பகுதியில் அதிக திரவம் இருப்பது கண்டறியப்பட்டது. இது அந்த உறுப்பிற்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்தது. இதய நோய் நிபுணர் டாக்டர் சாந்தி வழிகாட்டுதலுடன் அக்குழந்தைக்கு டாக்டர் அருண் கிருஷ்ணன் சிகிச்சை மேற்கொண்டார்.
இது குறித்து டாக்டர் அருண் கிருஷ்ணன் கூறுகையில், இந்த சிகிச்சையானது இதயத்தைச் சுற்றி இருக்கும் சவ்வு சார்ந்த பகுதியில் சேர்ந்திருக்கும் திரவத்தை ஊசி மூலம் எடுக்கும் சிகிச்சையாகும். இதன் காரணமாக ரத்த ஓட்டம் சீரடையும். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தைக்கு 3 டோஸ் சர்பாக்டன்ட் கொடுக்கப்பட்டது. மேலும் குழந்தைக்கு இயல்பாக சுவாசிக்கும் வரை 10 நாட்களுக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் தாமதப்படுத்தினால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். மிகவும் சிறிய குழந்தையாக இருந்ததால் இந்த சிகிச்சையை மேற்கொள்வது என்பது மிகவும் சிக்கலானதாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கண்ணன் கூறுகையில், கடந்த 3 தலைமுறையாக இங்கு குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உயிர் பிழைப்பு விகிதம் தற்போதுள்ள சிகிச்சை முறையில் 85 விழுக்காடு உயர்ந்துள்ளது. பிறந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.