சென்னை, ஜூலை 28- மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறையில் பணிபுரியும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவருடைய மனைவி இந்துமதி சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதுகுறித்து இந்துமதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை எம்கேபி நகரில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் தனது கணவர் இளங்கோ தங்களுடைய 13 வயது மகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதுகுறித்து பலமுறை காவல் நிலையங்களில் புகார் அளித்தும் அவர் காவல்துறையில் பணியாற்றுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும், இதனால் மன உளைச்சலில் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். தன் கணவரை அழைத்து வந்து விசாரணை செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறினார். பின்னர் துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் காவல் அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக துணை ஆணையர் உறுதி அளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாதர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் மாதர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் மனோன்மணி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சாந்தி, செயலாளர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.