districts

img

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் மக்கள் சேமிப்பு பணத்திற்கு ஆபத்து

கோவை:
பொதுத்துறை வங்கிகளின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை மக்கள் சேமிப்பிற்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும். மத்திய அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுப்பது என இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் தமிழ்நாடு மாநில மாநாடு எச்சரித்துள்ளது.

இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசனின் தமிழ் மாநில 18ஆவது மாநில மாநாடு கோவையில் இரண்டுநாட்கள் நடைபெற்றது.மாநிலத் தலைவர் எஸ்.அரிராவ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் வரவேற்புக்குழு தலைவர் பி.ஆர்.நடராஜன் எம்.பி., வரவேற்புரை ஆற்றினார். இம்மாநாட்டை துவக்கிவைத்து இந்திய வங்கி ஊழியர்சம்மேளனத்தின் பொதுச்செயலா ளர் தேபஷிஸ் பாசு சவுத்ரி உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச்செயளாளர் என்.ராஜகோபால்,  சிஐடியு மாநிலச்செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன்ராஜ், அலகாபாத் வங்கி ஊழியர் தலைவர் சஞ்சய் குமார் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவ தலைவர் எழுத்தாளர் ச.
தமிழ்ச்செல்வன் பண்பாடு, கல்வி, பள்ளி என்கிற தலைப்பில் கருத்துரையாற்றினார்.மாநாட்டு தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.கிருட்டிணன் முன்மொழிந்தார். இதில், மக்கள் சேமிப்பிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது அரசுவங்கிகளே; மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமா க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்; மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் நடவடிக்கையை எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுப்போம்; வங்கிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்; இந்தியன் வங்கிகளில் பணியாற்றும்5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்; அதுநாள் வரையில் சட்டப்படியான ஊதியம், போனஸ் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்; எழுத்தர், கடைநிலை ஊழியர்களுக்கான புதிய பதவி உயர்வு கொள்கையை உடனடியாக வெளியிட வேண்டும். தூய்மைப் பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள், கேன்டீன் ஊழியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்; விஞ்ஞானப் பூர்வமான மாற்றல் கொள்கையை உருவாக்க வேண்டும்; கொரோனா காலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உயிர் பாதுகாப்பு கவசங்கள் அளிக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மகளிர் அமர்வு
மாநாட்டின் மகளிர் அமர்வு, சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தி தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ்ஊழியர் சங்க இணை செயலாளர் எம்.கிரிஜா சிறப்புரை நிகழ்த்தினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் சார்பில் மாநில செயலாளர் ஏ.ராதிகா வாழ்த்துரை நிகழ்த்தினார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் தமிழ் மாநிலதலைவராக சுனில் குமார், பொதுச் செயலாளராக ரமேஷ்குமார் மற்றும் பொருளாளராக ஆறுமுகம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.முன்னதாக, மாநாட்டில், மாநிலம் முழுவதும் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்று வங்கிகளில் மக்கள் சேவையை மேம்படுத்துவது, ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், மத்திய அரசின் வங்கிகள் தனியார்மயமாக்கல் நடவடிக்கை இதனை எதிர்த்த போராட்டங்கள் குறித்து விவாதித்தனர்.