சென்னை,டிச.22- வட சென்னை கொளத்தூர் தொகுதி நீலம் கார்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ் (26) துரைப் பாக்கம் காவலர்களால் துன்புறுத்தப் பட்டு பலியான சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டனம் தெரி வித்துள்ளது. இது குறித்து கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : வட சென்னையின் குடிசைப்பகுதி இளைஞர்கள் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிர் பலியாகும் சம்பவம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் சில மாதங்களில் கொடுங்கையூரில் ராஜசேகர், ஓட்டேரியில் ஆகாஷ், தற்போது தினேஷ் என உயிர்ப்பலி நீண்டு கொண்டே போகிறது. இறந்தவர்கள் குற்றவாளிகள், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்று காவல்துறையினர் காவல்நிலைய மரணங்களை நியாயப்படுத்தும் வகையில் பரப்புரை செய்கின்றனர். வழக்கினை திசைதிருப்பவும், ஆதாரங்களை அழிக்கவும், பேரம் பேசி பணம் கொடுத்து பிரச்ச னையை முடிக்கவும் எடுத்து வரும் முயற்சிகள் ஒவ்வொரு லாக்கப் மர ணங்களிலும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. பள்ளி படிப்பை முடித்து மேல்படிப்புக்கான வாய்ப்பு மறுக்கப் பட்ட மாணவர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகுதல், குற்ற செயல்களில் ஈடுபடுதல் என திசைமாறி போகின்றனர். ஏழை எளிய உழைப்பாளி குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் கல்வி மறுக்கப்பட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் திசைமாறி போவதற்கு சமூக அமைப்பும் - ஆட்சியாளர்களுமே பொறுப்பாளர்கள்.
ஆனால் குற்ற வழக்குகள் உள்ளது என்ற காரணத் தாலேயே ஒருவரை மனிதத் தன்மை யற்ற முறையில் துன்புறுத்தி அடித்துக் கொல்வதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக் கிறது. தமிழகத்தில் இந்தாண்டு மட்டும் 4 லட்சத்து ஆயிரத்தி 118 பேர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்கள் அனை வருக்கும் காவல்துறை தண்டனை கொடுக்கப்போகிறதா? உண்மை யில் காவல்துறையினரால் சாகடிக்கப் படும் இளைஞர்கள் கேட்பாரற்றவர்க ளாகவும், வழக்கு நடத்த வழி யில்லாதவர்களாகவும், எவ்விதமான செல்வாக்கும் இல்லாதவர்களாகவும் உள்ளனர். நலிந்த பிரிவினர் மீதான காவல்துறையினரின் இத்தகைய தாக்குதலை மனித உரிமைகளை வலியுறுத்துகின்ற யாரும் ஏற்க முடியாது. மனித உரிமைகள், நீதிமன்றம், சட்டம், வழக்கு நடைமுறைகள் எல்லா வற்றுக்கும் மேலானதாக காவல்துறை மாறிவிடாமல் தமிழக அரசு ஒழுங்குபடுத்த வேண்டும். கொடுங்கையூர் ராஜசேகர், ஓட்டேரி ஆகாஷ் தற்போது கொல்லப் பட்டுள்ள கொளத்தூர் தினேஷ் ஆகிய இளைஞர்களின் உயிரிழப்பு குறித்த விசாரணையை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தினேஷ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். ஏற்கனவே காவல்துறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதியும் - நிவாரணமும் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடசென்னை மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.