districts

img

ஒன்னல் வாடியை மாநகராட்சியுடன் இணைக்க ஊராட்சி மக்கள் எதிர்ப்பு!

கிருஷ்ணகிரி, ஜன.20- ஒன்னல்வாடி ஊராட்சியை ஓசூர் மாநகராட்சியுடன் இணைக்க அரசு அறிவிப்பு விடுத்துள்ளதை அடுத்து இணைக்க கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மக்கள் மனு அளித்தனர். ஓசூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒன்னல்வாடி ஊராட்சியில் ஜொனபண்டா,நவதி, ஓ.காரப்பள்ளி சோமநாதபுரம்,லட்சுமி நரசிம்மா நகர் ஒன்னல்வாடி ஆகிய கிராமங்கள் உள்ளது. எந்த தொழிற்சாலைகள் இல்லாத பகுதி யான இங்கு பெரும்பாலான மக்கள் சிறு விவசாயத்தையும், விவசாய கூலி வேலையையும்,100 நாள் வேலையையும் நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வாழ்வாதாரத்திற்கே போராடிக் கொண்டிருக்கும் இப்பகுதி மக்கள் கிராமங்களுக்கான மின் கட்டணம், குடிநீர் கட்டணம்,வீட்டு வரி மிகக் குறைந்த அளவே செலுத்தி வரும் நிலையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் மேற்சொன்ன கட்டணங்கள் கடுமையான உயர்வு ஏற்படும்.ஏழை மக்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம்,100 நாள் வேலை கிடைக்காத நிலை ஏற்படும், மக்களுக்கு மாநகராட்சிக்கான அனைத்து கட்டணத்தையும் கட்ட முடியாத நிலையே ஏற்படும். மேலும் குடிநீர் குழாய்,கழிவுநீர் கால்வாய்கள், உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கு கூட வெகு தூரத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கெனவே கிராம ஊராட்சிகளுக்கு வசதி குறைபாடுகள் அதிகம் உள்ள நிலையில்,மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் இன்னும் மோசமான வசதி குறைபாடுகள் ஏற்படும்.கிராமங்களில் மண் சுவர் வைத்து வீடு கட்டுவதற்கு கூட மாநகராட்சி இடம் அனுமதி பெற வேண்டிய இக்கட்டான கடுமையான நெருக்கடி ஏற்படும். எனவே, பொருளாதாரத்தில், அடிப்படை வசதிகளில் மிகவும் பின் தங்கியுள்ள மக்கள் நலன் கருதி ஒன்னல்வாடி ஊராட்சியை ஓசூர் மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் அந்தோணிசாமி தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.