சென்னை,ஏப். 11- சென்னை மணலியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் நடமாடும் சிகிச்சை மையம் ஏஎம் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெட்ரோபுராடக்ட்ஸ் நிறுவனத்தின் சமூகபொறுப்பு திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவர் (டாக்டர் மொபைல்) என்ற இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் சுகாதார சேவைகள் கிடைப்பதில் ஏற்படும் இடைவெளியை குறைக்க தேசிய சுகாதார இயக்கம் இதுபோன்ற நடமாடும் மருத்துவ பிரிவுகளை ஏற்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது என்று ஏ.எம்.பவண்டேஷன் நிறுவனர் அஸ்வின் முத்தையா கூறினார். இந்த நடமாடும் மருத்துவமனை நவீன, அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடியது என்றும் அவர் கூறியுள்ளார். டாக்டர் மொபைல் முயற்சியின் முதல் மருத்துவ முகாம் சென்னை கன்னியம்மன் பேட்டையில் நடைபெற்றது, முதல் முகாமின் போது 100 க்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை பெற்றனர்.