செங்கல்பட்டு, ஜுலை 7- சமூக குற்றங்களுக்கு காரணமாக உள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கலையரசி, நிர்வாகிகள் ஜெயந்தி, தேவி உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமாரிடம் அளித்துள்ள மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் வெங்கம்பாக்கம் கிராமத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமியின் கொலை வழக்கில் 17 வயதுடைய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சந்தித்து விசாரித்த வகையில் சிறுமியின் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும் அந்த கிராமத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், இதனால் அப்பகுதியல் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதும் தெரிய வருகிறது. சிறுமியை படுகொலை செய்த 17 வயது இளைஞரும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையானவர் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனையில் மாவட்ட காவல் துறையினர் தலையிட்டு சிறுமியின் படுகொலைக்கு காரணமான 17 வயது இளைஞரை பிணையில் வராவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வேண்டும். மேலும் இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.