சென்னை, மே 20 - நெமிலிச்சேரியில் வசிக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. பல்லாவரம் தொகுதி, நெமிலிச்சேரி பகுதியில் பெரியார் நகர், நேதாஜி நகர், ஜமீன் ராயப்பேட்டை, ஆலமரம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். ஏரியை ஒட்டிய பகுதியில் மக்கள் வசித்து வரும் மக்களை வெளியேறும்படி, நீர்வள ஆதாரத்துறை முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழனன்று (மே 19) குரோம் பேட்டை ஜிஎஸ்டி சாலையில் மறியல் நடத்தினர். இதனையறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிச் செயலா ளர் எம்.சி. பிரபாகரன், பகுதிகுழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன், தாம்பரம் மாநகராட்சி 28வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி விஜயலட்சுமி ஆகியோர் சென்று போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளியன்று (மே 20) மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,, சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசியதற்கு மாறாக குடியிருப்போருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். பயன்பாட்டை இழந்த பகுதியில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு நில வகை மாற்றம் செய்து அரசு பட்டா வழங்க வேண்டும் என்றார். இந்நிகழ்வின்போது பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.தாமோதரன், பகுதி குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன், கிளைச் செயலாளர் மாயவன், வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.ஜீவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.