சென்னை, நவ. 1- சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சனை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்ணை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2000 களப்பணியாளர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குடிநீர் விநியோக அமைப்பில் தேவைக்கேற்ப ஆங்காங்கே குளோரின் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் விநியோக நிலையங்களுக்கு தேவையான பிளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற ரசாயன பொருட்கள் தேவையான அளவு வைக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் அடைப்பு ஏற்படும் 502 இடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் அடைப்பு தேக்கம் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளில் குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள அனைத்து இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் சார்ந்த புகார்களை 044 – 45674567 மற்றும் 1916 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.