கல்பாக்கம்,மே7- அணுமின் நிலையத்தில் வேலைக்கு சேர எழுத்து தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சி பிரிவில் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன் பணிக்கான தேர்வு இந்தியில் நடத்தப்பட்டது. கல்பாக்கத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டு அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அணுமின் நிலையத்தை கட்ட புதுப்பட்டினம் உள்ளிட்ட கிராம மக்கள் நிலம் கொடுத்தனர். அப்போது இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அவர்கள் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த உறுதிமொழி எதுவும் நிறை வேற்றப்படவில்லை என்றும் வேலைவாய்ப்பு அனைத்தும் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரு வதாகவும் அணுமின் நிலையம் கட்ட நிலம் வழங்கிய கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து புதுப்பட்டினம் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் கூறியதாவது: அணுமின் நிலையத்தில் வேலைக்கு சேர எழுத்து தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சி பிரிவில் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன் பணிக்கான தேர்வு இந்தியில் நடத்தப்பட்டது. இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த தேர்வை எழுத முடியாமல் போய்விட்டது. அவர்களால் இந்த வேலையில் சேர முடியவில்லை. அந்த நிறுவனம் உறுதி அளித்ததை போல் புதுப்பட்டினம் கிராமத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.