பத்திரிக்கையாளர் போராட்டம்
சிதம்பரம், ஏப். 21 - வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்தி சேகரிக்க விடாமல் அவதூறாக பேசிய கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளரை கண்டித்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகளின் பதிவான வாக்குபதிவு எந்திரங்கள் சி.முட்லூரில் வைக்கப்பட்டுள்ளது. சீலிடப்பட்ட அந்த கட்டிட வளாகத்தை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் புதனன்று (ஏப்.21) சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாண்டியன், புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழி தேவன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிடச் சென்றனர். அதனை செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஏடிஎஸ்பி சரவணகுமார், பத்திரிக்கையாளர்களை ஒருமையில் திட்டி செய்தி சேகரிக்க விடாமல் மிரட்டி வெளியேற்றினார். இதனையடுத்து ஏடிஎஸ்பி சரவணகுமாரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏடிஎஸ்பி-யின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னேற்ற சங்கம், மாநில தேர்தல் ஆணையார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் தெரிவித்துள்ளது.