districts

வாடகை வசூல் செய்வதில் முன்னேற்றம் அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் பாராட்டு

சென்னை, பிப். 11 - கோவில் நிலங்களிலிருந்து வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், இடங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றின் பல ஆண்டுகளாக வாடகை வசூலிக்கப்படவில்லை என வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன்பேரில், வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டும் வசூலிக்கவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் வெள்ளியன்று (பிப்.11) விசாரணைக்கு வந்தது.  அப்போது, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அறநிலையத்துறை கோவில் நிலங்களிலிருந்து வர வேண்டிய வாடகை பாக்கி 2 ஆயிரத்து 390 கோடி ரூபாயை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதி கள் கேள்வி எழுப்பினர். காணொலி வாயிலாக ஆஜராகியிருந்த ஆணையர், ஒரு வருடத்திற்கு 540 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டு மென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருவதாக தெரி வித்தார். ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் வாடகை வசூலில் காவல்துறை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து கோவில்களின் சொத்துக்களும் தொகுக்கப்பட்டு, வாடகைதாரர்களின் பட்டியல், வாடகை செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த விவரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப் படும் என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.