பள்ளி மாணவி சடலமாக மீட்பு
ஆரணி, மே 29- ஆரணி அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணமல்போன 11ஆம் வகுப்பு மாணவி ஞாயிற்றுக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரவி. இவரின் மனைவி பச்சையம்மாள். இவர்களுடைய மகள் ஹரிபிரியா (16) ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மகளை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற ஹரிபிரியா வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆகாரம் கிராமத்தை ஒட்டிய வயல் வெளியிலுள்ள விவசாய கிணற்றில் ஹரிபிரியா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஷ பூச்சி கடித்து சிறுமி பலி
திருவண்ணாமலை,மே 29- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் கொவளைவேடு இந்திரா நகர் பகுதியில் 25க்கும் மேற்பட்ட பழங்குடி காட்டு நாயக்கர் இன மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் சனிக் கிழமை (மே 28) இரவு 9 மணியளவில் சிவலிங்கம் சுகாசினி தம்பதியின் ஒன்பது வயது மகள் அனுஷ் காவை விஷ பூச்சி கடி த்துள்ளது. இதையடுத்து சிறுமியை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். ஆனால் சிகிச்சை பல னின்றி சிறுமி உயிரிழந்தார்.
தெருக்களில் சாதிப்பெயரை நீக்கும் பணி தொடக்கம்: மாநகராட்சி
சென்னை, மே 29- சென்னையில் சாதி பெயர் கொண்ட தெருக்களின் பெயர்களை மாற்றும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முற்போக்கு அமைப்புகளின் சார்பில் உள்ளாட்சி துறை அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெருக்களுக்கு சாதிப் பெயர் வைத்திருப்பதை அகற்ற வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. அதன் பேரில் தெருக்களுக்கு வைக்கப் பட்டுள்ள சாதி பெயர் நீக்கப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் அப்பாவு கிராம தெரு 3-வது தெரு என்று 171-வது வார்டில் உள்ளது. இந்த தெருவின் பெயரில் உள்ள சாதி பெயரை மாநகராட்சி தற்போது நீக்கி மாற்றி அமைத்துள்ளது. அப்பாவு (கி) 3-வது தெரு என்று புதிய பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் உடல் தகனம்
பர்கூர்,மே 29- நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் தகனம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி அருகே உள்ள சூலமலை ஊராட்சிக்கு உட்பட்ட மேல் கொட்டாய்கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 53). இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படைப் பிரிவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி தேதி சிக்கிம் மாநிலம் மனநூல் மாவட்டம்பிரிட்ஜ் பாயின்ட் என்னுமிடத்தில் ராமன் சுரங்க பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார் அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.. இதையடுத்து வீரமரணமடைந்த ராமனின் உடலுக்கு உறவினர்கள் கிராம மக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்துராமனின் உடல் தகனம் செய்யப்பட்டது. வீரமரணமடைந்த ராமனுக்கு மனைவியும்,ஒரு மகன், மகள் உள்ளனர்.
சாதனை படைத்த வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி, மே 29- கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ளவர்கள் தமிழக முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல் அமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக ரூ.1லட்சம் வீதம், தங்க பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமல் ஒரு தங்கபதக்கமும், ஒரு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. விருதுக்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இத்திட்டத்தின்படி, 2021-22-ம் ஆண்டிற்கான (காலம் 1.4.2018 முதல் 31.3.3021 வரை) முதல் அமைச்சர் மாநில விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விருதிற்கான விண்ணப்பப் படிவத்தை விளையாட்டு மேம்பாட்டு ஆணை இணைய தளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.