districts

சென்னை விரைவு செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் சேர்க்க சிறப்பு முகாம்

திருவண்ணாமலை, டிச.12- தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெற்றுள்ள அனைத்து நுகர்வோரும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை தெற்கு உபகோட்டம் தச்சம்பட்டு பிரிவில் உள்ள பெருமணம் கிராம மக்களிடம் நேரடியாக ஆதார் எண்ணை இணைப்பது குறித்து உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன், இளநிலை பொறியாளர்கள் சிவலிங்கம் முத்துவேல், ஜெகதீசன் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் விளக்கினர்


நாட்டுக்கோழி வளர்ப்பு இன்று முதல்  இலவசப் பயிற்சி

திருவண்ணாமலை, டிச. 12- திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகே கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இங்கு, மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது பல்வேறு இலவசப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிசம்பர் 13, 14) நடக்கிறது. முதலில் முன்பதிவு செய்யும் 20 பேருக்கு மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 04175-298258, 9551419375 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது


சிறுமியின் தலையில்  3 கிலோ கட்டி அகற்றம்

வேலூர், டிச.12- வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் தலையிலிருந்த சுமார் 3 கிலோ எடையுள்ள கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பிளாஸ்டிக் அறுவைசி கிச்சை நிபுணர் ஸ்ரீனிவாஸ், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் திவ்யா, வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளனர். அவர்களை, மருத்துவமனை இயக்குநர் மற்றும் அறங்காவலர் மருத்துவர் என்.பாலாஜி ஆகியோர் பாராட்டினார்.


தொடர் மழையால் குளமாக மாறியது உப்பளம்

விழுப்புரம்,டிச.12- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கடந்த இரு தினங்களாக 5000-க்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். மாண்டஸ் புயலின் போது வீசிய காற்றினால் 100 ஏக்கருக்கு மேல் கதிர் வந்த நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. தற்போது பெய்து வரும் மழையால் சாய்ந்த பயிர்கள் நீர்ல் முழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


குளம்போல்  தண்ணீர் தேங்கிய பண்ருட்டி சாலை

கடலூர்,டிச.12-  கடலூர் மாவட்டம், பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் கனமழை பெய்தது . இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர்.  பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளை நீராக பெருக்கெடுத்து ஓடியது. பண்ருட்டி - சென்னை சாலையில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் கொள்ளு காரன்குட்டை வரையிலும் குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது.  எல்.என்.புரம்,கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில்அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.