பள்ளி வளாகத்தில் கோவில்: மாணவர்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி, பிப். 7- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கரா புரம் அருகே தொழுவந்தாங்கலிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இந்தப் பள்ளிக்கு மாண வர்கள் வழக்கம்போல் சென்றனர். அப்போது பள்ளி வளாகத்தை ஆக்கிர மித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் புதிதாக கோவில் கட்டி வந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனே தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் கோவில் கட்டினால் இட நெருக்கடி ஏற்படும் என்றும் கோவிலில் விழா நடக்கும் போது கல்வி பாதிக்கப்படும். எனவே பள்ளி வளாகத்தில் கோவில்கட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாணவர்கள் தங்க ளது பெற்றோர்களுடன் கடுவனூர்-அத்தியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட பொன்பரப்பி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று மாணவர்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
ஓசூர், பிப். 7- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகர் 3ஆவது கிராஸ் தெருவில் வசிப்பவர் தெய்வம் (38). இவர் கர்நாடக மாநிலம் பொம்மசந்திராவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி குடும்பத்துடன், ஒரு விழாவில் கலந்து கொள்ள தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சென்றார். அவரது வீட்டின் பூட்டு உடைபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் ரத்னா என்பவர், இதுகுறித்து தெய்வத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்த போது பிரோவில் வைக்கப்பட்டிருந்த 13 சவரன் நகைகளை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியை வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
அரக்கோணம், பிப். 7- அரக்கோணம் அடுத்த தக்கோலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் உமா 50). முருங்கை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியை யாக வேலை செய்கிறார். இவரது கண வர் ஜான்சன் சென்னையில் குடிநீர் வடி கால் வாரியத்தில் வேலை செய்கிறார். வழக்கம் போல் ஆசிரியை உமா வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பிய அவர் வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 சவரன் நகை, ரூ.1,000 கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உமா தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி விவசாயி பலி
நெமிலி, பிப். 7- ராணிப்பேட்டை மாவட்டம், பனப் பாக்கம் அடுத்த தென் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் (70) இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு மோட்டர் பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்தார். காவேரிப்பாக்கம் அடுத்த கல்கத்தா காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கங்காதரன் பைக் மீது மோதியது. இதில் கங்காதரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு வந்த காவல் துறையினர் கங்காதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்புக்கூறு திட்ட நிதியை மடை மாற்ற எதிர்ப்பு
புதுச்சேரி,பிப்.7- சிறப்புக்கூறு திட்டநிதியை வேறு திட்டங்களுக்கு செலவு செய்வதை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு ஒதுக்கப்படும் சிறப்புகூறு திட்ட நிதியை வேறு திட்டத்திற்கு மடைமாற்றம் செய்யக் கூடாது. இந்தாண்டு ஒதுக்கப்படும் சிறப்புகூறு நிதியை முழுவதும் செலவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி தலித் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நீல.கங்காதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் ஜி.ராமசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் கொளஞ்சியப்பன், துணைத் தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் சரவணன், நிர்வாகிகள் உமா, குப்புசாமி, செங்குலத்தான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.