districts

img

பீடி தொழிலாளர்கள் 40 பேருக்கு தலா 2 சென்ட் வீட்டு மனை

திருவள்ளூர், டிச 21- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தை சேர்ந்த பீடி சுற்றும் 40 தொழிலாளர்களுக்கு தலா 2 சென்ட் வீதம் வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது.  திருக்கண்டலம் கிராமத்தில் டிச.11 அன்று மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மெய்யூர் கிராமத்தைச் சார்ந்த பீடி சுற்றும் 40 தொழிலாளர்களுக்கு இலவச குடிமனை  பட்டாவை மாவட்ட துணை ஆட்சியர் கணேஷ் வழங்கினார்.  இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வெள்ளியன்று (டிச. 20) மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட  குருபுரத்தில்  பீடி சுற்றும் 40 தொழிலாளர்களுக்கு தலா 2 சென்ட் வீதம் அளந்து கல் நட்டு அந்தந்த பயனாளிகளிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.  நீண்ட காலமாக போராடி வந்த நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் குடிமனை பட்டா வழங்கியுள்ளது ஆறுதலாக உள்ளது. இதனை செங்கை மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு), மாவட்ட கவுரவ தலைவர் ப.சுந்தரராசன், மாவட்ட தலைவர் டி.ஆர்.பலராமன், மாவட்ட செயலாளர் கே.முருகன், பொருளாளர் என்.முத்துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் டி.டில்லி, மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் வரவேற்றுள்ளனர். ஊத்துக்கோட்டை வட்டாச்சியர் மதன், கிராம நிர்வாக அலுவலர் அதிசயராஜ், நில அளவையர் நிஜாம் ஆகியோர் வீட்டு மனைகளை அளந்து கல்நட்டு மக்களிடம் ஒப்படைத்தனர்.