சென்னை, 15- சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 75 சதம் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 32 வயது ஆண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 12ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கபட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் லெவல் 75 சதவீதம் இருந்தது. சிடி ஸ்கேனில் நுரையீரல் பாதிப்பு 75 சதவீதம் இருந்தது. முதல் இரண்டு நாட்களுக்கு ஆக்ஸிஜன் வினாடிக்கு 15 லிட்டர் முககவசம் மூலம் கொடுக்கப்பட்டது. பின்பு தொடர்ந்து மூச்சுத்திணறல் இருந்த காரணத்தினால் 9 நாட்களுக்கு சிபிஏபி வெண்டிலேட்டர் உபகரணம் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது.
கொரோனா நோய்க்கு உண்டான மருந்துகள் அனைத்தும் ஊசி மூலம் வழங்கப்பட்டது. பின்பு செயற்கை சுவாசம் முறைப்படி விலக்கப்பட்டு ஆக்ஸிஜன் வினாடிக்கு 10 முதல் 15 லிட்டர் முகக்கவசம் மூலம் கொடுக்கப்பட்டது. பின்பு படிப்படியாக உடல்நிலை முன்னேற்றம் அடைந்து பிரச்சனை இன்றி இயற்கையாக சுவாசிக்கும் அளவு அவரது உடல்நிலை சீரடைந்துவிட்டது. பின்பு முற்றிலும் கொரோனா நோயிலிருந்து குணமடைந்த பிறகு செவ்வாயன்று (ஜூன் 15) வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அதேபோல் சமத்துவபுரத்தை சேர்ந்த 26 வயது ஆணும் கொரோனா தொற்று ஏற்பட்டு 85 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. அவரும் முழுமையான குணம் அடைந்து வீடு திரும்பினார். கெருகம்பாக்கத்தை சேர்ந்த 38 வயது பெண்ணும் கடுமையாக கோவிட் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் லெவல் 70 சதவீதம் இருந்தது. அவரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். 3 பேருக்கும் சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினரை மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் தேரணிராஜன் பாராட்டினார். மேலும் நோயாளியின் நலம் விசாரித்து நோயாளிகளுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.