districts

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 73 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

திருப்பத்தூர், மே 9- வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த 4 மாதங்களில் 73 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று சைல்டுலைன் அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத பெண் மற்றும் 21 வயது பூர்த்தி ஆகாத  ஆணிற்கு திருமணம் செய்து வைப்பதை தடுக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் சமூகநலத்துறை, சைல்டுலைன் அமைப்பு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.  சிறுவயதில் திருமணம் செய்து கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குழந்தை திருமணம் அதிகம்  நடைபெறும் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இதுதொடர்பான துண்டு பிரசுரங்கள் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் படிப்பை பாதியில் கைவிட்ட சிறுமிகளுக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பே திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஜனவரி மாதம் 9, பிப்ரவரி மாதம் 9, மார்ச் மாதம் 24, ஏப்ரல்  மாதம் 31 என்று 4 மாதங்களில் 73 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு 1098 என்ற தொலைப்பேசிக்கு சிறுமிகள் திருமணம் தொடர்பாக 107 அழைப்புகள் வந்தன. அவற்றில் 73 திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. 17 சிறுமிகளுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று விட்டது. அவர்களை மீட்டு குழந்தை நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 9 அழைப்புகள் பொய்யானவை. 5 சிறுமிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். 3 அழைப்புகள் சரியான முகவரி தெரிவிக்க வில்லை என்று சைல்டுலைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.