செங்கல்பட்டு, டிச. 21- அலுவலர்களின் அலட்சியத்தால் கோப்புகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் கிராம மக்களுக்கு 100 நாள் வேலை கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் விவசாய தொழிலாளர் சங்கமும் புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து இந்திய ஜன நாயகம் மாதர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் க.ஜெயந்தி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், மாவட்டத் தலைவர் பி.சண்முகம், பொருளாளர் வி.சசிகுமார் ஆகியோர் மாவட்ட திட்ட அலுவலரிடம் மனு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தின் படி வேலை வழங்க கேட்டு மாதர்சங்கம் தொடர் போராட்டம் நடத்திவருகிறது. இந்தப் போராட்டத்தின் போது களத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழுத்துப்பூர்வ மாக உறுதியளிப்பு கடிதங்கள் வழங்கப் பெற்றும் பல கிராமங்களில் வேலை அளிக்கப்படவில்லை ஏனெனில் அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் மதிப்பீடு மாவட்ட திட்ட முகமைக்கு அனுப்பி உள்ள நிலையில் இதுவரை பணி உத்தரவு வழங்கப்படாமல் மாவட்ட திட்ட முகமை அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உத்தர வாத கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் விளிம்பு நிலையில் உள்ள கிராம ஊராட்சி பொதுமக்கள் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வரு கின்றனர். உடனடியாக மாவட்ட திட்ட முகமை அலுவலர் தலையிட்டு அனைத்து ஊராட்சிகளில் இருந்து வரப்பட்டுள்ள தொழிலாளர் மதிப்பீடு அடிப்படையில் பணி ஆணை வழங்கி கிராமப்புற விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.