districts

ஜம்புலிங்கம் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திடுக! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

அரியலூர், டிச.10- ஜம்புலிங்கம் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தா.பழூர் ஒன்றியம் காசாங்கோட்டை கிராமத்தில் நவம்பர் 20 அன்று தலித் வகுப்பைச் சார்ந்த காசிராசன்-ஸ்டான்லி அம்மாள் தம்பதியரின் மகள் தன்ஷிகா என்பவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்டம் சோழபுரம் அணைக்குடி கிராமத்தில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்துள்ளனர். அப்போது ஆதிக்க சாதியினர் ஒரு சிலர் அவர்களை தடுத்து எங்கள் தெருவழியாக செல்லக் கூடாது என  தரக்குறைவாக பேசியதால் மோதல் ஏற்பட்டது.  இதுகுறித்து சோழபுரத்தைச் சார்ந்த புருஷோத்தமன் அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்யாமல், சம்பவத்தில் ஈடுபடாத காந்தி என்கின்ற ஜம்புலிங்கம் என்பவரை வீட்டிற்குள் புகுந்து ஜம்புலிங்கத்தையும் அவரது மகன் மணிகண்டனையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.  

ஜம்புலிங்கம் அடி வயிற்றில் காவல்துறை பூட்ஷ் காலால் உதைத்துள்ளது. அதனால் பலத்த அடிபட்டு உடல் நலம் பாதித்த ஜம்புலிங்கம், திருச்சி மாருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சை பலனில்லாமல் டிசம்பர் 8 அன்று ஜம்புலிங்கம் மரணம் அடைந்தார்.  அத்துமீறி மனித நேயம் இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். இறந்த ஜம்புலிங்கம் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். அதேநேரத்தில் தலித் மக்கள் மீது  தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இரண்டு பகுதி மக்களும் அமைதியாக வாழ்வதற்கு மாவட்ட காவல் துறையும், மாவட்ட ஆட்சி நிர்வாகமும், தமிழக அரசும்  தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.  சிபிஎம் ஆறுதல் இந்நிலையில், ஜம்புலிங்கத்தின் குடும்பத்தினர் மற்றும்  உறவினர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மணிவேல், எம்.வெங்கடாசலம் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காசாங்கோட்டை கிராமத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.