districts

img

மதுபானக் கடையை அகற்ற கோரி பெண்கள் தொடர் போராட்டம் வெற்றி

வேலூர், ஏப். 13- வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மந்தைவெளி, குறிஞ்சி நகர் பகுதியில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் புதிதாக அரசு மதுபான கடை கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டது. அப்பகுதி பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.சங்கரி தலைமையில் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து காவல்துறையினரிடம் மனு அளித்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கை யும் எடுக்காததால் புதனன்று (ஏப். 13) மீண்டும் கடை முன்பு திரண்டு, டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு படுவதாக அறிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள் மாதர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். அதில் கடையை இனி திறக்கப் போவதில்லை, வேறு இடத்திற்கு மாற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரி வித்தார். அவர் அளித்த உறுதிமொழி ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதில் மாதர் சங்க மாவட்ட நிர்வாகி எம்.வளர்மதி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.நாகேந்திரன், வடக்கு தாலுகா செயலாளர் கே.பாண்டுரங்கன்,  கோவிந்தசாமி, பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.