districts

img

சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 8பேர் பலி! பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி நிவாரணம் வழங்கிட சிபிஎம் வலியுறுத்தல்!

சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நிவாரணம் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்னக்காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிபத்தில் 8 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். 5 பேர் கவலைக்கிடமான முறையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் பட்டாசு விபத்துக்கள் அதிகரிப்பதும், அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொள்வது, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது, விதிமுறைகளை கறாராக கண்காணிப்பது போன்றவற்றில் அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கில் செயல்படுவதும் இதுபோன்ற விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல எனவும், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 20 லட்சமும், ஆலை நிர்வாகம் சார்பில் ரூ. 10 லட்சமும் உடனடியாக வழங்கிட வேண்டுமென உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தொழிற்சங்க அமைப்பினரும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி உடனடியாக தமிழக அரசு நிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும். மேலும், படுகாயமுற்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை  அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.