விருதுநகர், டிச.11- விருதுநகரில் 7 வயது சிறுமி கந்த பெருந்தாசன யோகாவை தொடர்ந்து 45 நிமிடங்கள் நாற்காலியில் செய்து உலக சாதனை படைத்துள்ளார். அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சுப்புராம்-புவனேஸ்வரி தம்பதியரின் மகள் சாய்ஆர்த்தி (7). இவர் விருதுநகர் பி.எஸ்.சி மேல்நிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். யோகா கலையில் மிகவும் ஆர்வமுள்ளவராக திகழ்ந்துள்ளார். இதையடுத்து, அவரது பயிற்சியாளர் மாலினி, இவருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கியுள்ளார். இதையடுத்து, உலக சாதனை படைக்கும் அளவிற்கு திறனை வளர்ந்துள்ளார். இந்நிலையில், நாற்காலி ஒன்றில் கந்த பெருந்தாசன யோகாவை ஏற்கனவே, சிவகங்கையைச் சேர்ந்த ஒரு மாணவி 15 நிமிடங்கள் செய்திருந்தார். அதுவே இதுவரை சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடிக்க சாய் ஆர்த்தி முடிவு செய்தார். இதையடுத்து, விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரி கலையரங்கில் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். நோபிள் உலக சாதனை நடுவர்கள் திருஞானராமன், அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது சிறுமி சாய்ஆர்த்தி, நாற்காலி ஒன்றில் 45 நிமிடங்கள் கந்த பெருந்தாசன யோகாவை செய்து காட்டி அசத்தினார். இதையடுத்து, கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் சிறுமியை வெகுவாக பாராட்டினர்.