districts

img

நீர் நிரம்பி மறுகால் பாயும் புல்வெட்டி கண்மாய்

விவசாயிகள் மகிழ்ச்சி சின்னாளபட்டி, செப்.7- ஆத்தூர் கருங்குளம், நடுக்குளம் நிரம்பி செம்பட்டி புல்வெட்டி கண்மாயில் தண்ணீர் மறுகால் பாய்ந்து குடகனாற்றிற்கு செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், செம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது 336 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட புல்வெட்டி கண்மாய்க்கு   மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஆடலூர் பன்றிமலையில் பெய்யும் மழைத்தண்ணீர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரும்போது வழிந்து வரும் தண்ணீர் நடுக்குளம், கருங்குளம் வழியாக செம்பட்டி புல்வெட்டி கண்மாய்க்கு வருகிறது. தற்போது புல்வெட்டி கண்மாயில் தண்ணீர் மறுகால் பாய்ந்து குடகனாற்றிற்கு செல்கிறது. மழைத்தண்ணீரால் புல்வெட்டி கண்மாய் நிரம்பி மறுகால் போகும் செய்தி கேட்ட அப்பகுதி மக்கள் புல்வெட்டி கண்மாயை பார்க்க படையெடுத்த வண்ணம் உள்ளனர். சிறுவர்கள் குளத்தில் குளிப்பதற்கு போட்டி போட்டு கொண்டு செல்கின்றனர். தற்போது புல்வெட்டி கண்மாய் சுற்றுலாத்தலம் போல் கூட்டம் நிரம்பி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இயற்கையாகவே ஆத்தூர் கருங்குளம் நிரம்பி அதன் கிழக்குப்புறம் உள்ள நடுக்குளம் நிரம்பி அதன்பின்னர் மிகப்பெரிய புல்வெட்டி கண்மாய் நிரம்பி தண்ணீர் மறுகால் போகும்படி வாய்க்கால் இயற்கையாகவே மூன்று குளங்களும் அமைந்துள்ளது  . இப்பகுதியில் ஆறு மாத காலத்திற்கு விவசாயிகளுக்கு கவலை இல்லை என்றதோடு ஆத்தூர், பாளையன்கோட்டை, போடிகாமன்வாடி, சீவல்சரகு ஆகிய ஊராட்சிகளுக்கு நீர் ஆதாரமாக புல்வெட்டி கண்மாய்உள்ளது என்றார்.

;