திருநெல்வேலி, டிச. 15- இலக்கிய உலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள் படைத்து வரும் கவிஞர் கலாப்ரியா, தனது “ வேனல்” நாவலைத்தொடர்ந்து எழுதியுள்ள “ மாக்காளை “ நாவல் செவ்வாயன்று நெல்லையில் வெளியிடப்பட்டது. நான்கு படைப்பாளிகளின் நூல் அறிமுகக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, கலாப்ரியாவின் இந்த நாவலை, எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் வெளியிட, தேர்ந்த வாசகரான பொன்னையா பெற்றுக் கொண்டார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் மாக்காளையை மையமிட்டு எழுதப்பட்ட நாவல் இது. திருநெல்வேலி சினிமா கொட்டகை ஒன்றில் பணிபுரியும் சிப்பந்தி விஸ்வம் என்பவரின் வழியாக கதை சொல்லப்படுகிறது. திருநெல்வேலியில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தியேட்டர்களின் நிலை, முண்டியடிச்சு, சட்டை கிழிந்து டிக்கெட் வாங்கிப்பார்த்த ரசிகர்களின் சாகசங்கள் என பால்ய காலத்தில் பலரும் பயணிக்கலாம். திரைப்படங்கள் வாழ்வில் ஒன்றியிருந்த காலத்தை இந்த நாவலில் கலாப்ரியா பதிவு செய்திருக்கிறார் என்று எழுத்தாளர் நாறும்பூநாதன் குறிப்பிட்டார். தொடர்ந்து,
எழுத்தாளர் நாறும்பூநாதன் எழுதிய “ திருநெல்வேலி -நீர் நிலம் மனிதர்கள் நூல் பற்றி கவிஞர் தானப்பன், எழுத்தாளர் பாஸ்கரன் எழுதிய “ நதிக்கரை அரசியல் “ நூல் பற்றி பேரா.பொன்னுராஜ், எழுத்தாளர் மருத்துவர் ராமானுஜம் எழுதிய “ எப்பவுமே ராஜா மற்றும் இசைபட வாழ்தல் “ ஆகிய இரண்டு நூல்கள் பற்றி கவிஞர் கலாப்ரியா,பேரா.முத்துலட்சுமி எழுதிய “ ஆற்றிற்கு தீட்டில்லை “ நூலைப்பற்றி பேரா.இலக்குவன் ஆகியோரும் திறனாய்வு செய்து பேசினர். கருத்தரங்கிற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். முன்னதாக கரிசல்குயில் கிருஷ்ணசாமி பாடல்கள் பாடினார். ஸ்ரீராம் சிவா வரவேற்புரை நிகழ்த்தினார். சிந்துபூந்துறை சண்முகம் நன்றி கூறினார். விழாவில், சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், கவிஞர் கிருஷி, சக்தி வேலாயுதம், கவிஞர் செல்வமணி, ராஜகோபால், எஸ்.எஸ்.பிரபு, சிவசங்கர் உள்ளிட்ட பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்டக்குழு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.